பசுமை பட்டாசு (Green crackers) என்றால் என்ன?
- kishor s
- Oct 23, 2022
- 2 min read
Updated: Nov 10, 2023

தீபாவளி நெருங்கும் இத்தருணத்தில் சமீப காலமாக நம் காதில் "பசுமை பட்டாசு" என்கிற வார்த்தையை அதிகமாக கேட்டிருக்க வாய்ப்புண்டு. அப்படி என்ன பசுமை பட்டாசில் உள்ளது? சாதாரண பட்டாசிற்கும் பசுமை பட்டாசிற்கும் உள்ள வித்தியாசங்களை இப்பொழுது வேதியியல் ரீதியாக காண்போம்.

அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் (Council of Scientific and Industrial Research - CSIR) பட்டாசு வெடிக்கும் பொழுது ஏற்படும் காற்று மாசுவை கருத்தில் கொண்டு, பட்டாசில் கலக்கப்படும் வேதிப்பொருட்களை ஆய்வகத்தில் ஆய்வு செய்து பட்டாசு தயாரிப்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை இந்த மன்றம் வெளியிட்டுள்ளது. இந்த நெறிமுறையின் படி தயாரிப்பதே "பசுமை பட்டாசு" என்று அழைக்கப்படுகிறது.
பசுமை பட்டாசின் நெறிமுறைகள்:-
பசுமை பட்டாசு சாதாரண பட்டாசுகளை விட குறைந்தபட்சம் 30 சதவீதம் குறைந்த அளவிலேயே காற்று மாசு இருத்தல் வேண்டும் (at least 30 % reduction of air pollution compared to ordinary fire crackers).
பசுமை பட்டாசில் கலக்கப்படும் வெடி மருந்துகளில் பேரியம் நைட்ரேட் (barium nitrate) என்கிற வேதிப்பொருள் இருத்தல் கூடாது. இந்த வேதிப்பொருள் காற்று மாசுவை அதிகரிப்பதுடன் நமக்கு பல உடல் உபாதைகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. அது மட்டுமில்லாமல் மெர்குரி (mercury), லெட் (lead) லித்தியம் (lithium) ஆர்சனிக் (arsenic) போன்ற அபாயகரமான வேதிப்பொருட்களும் இருத்தல் கூடாது.
பசுமை பட்டாசு, குறைந்த அளவிலான காற்று மாசு, குறைந்த அளவில் ஒலி எழுப்பும் தன்மைகளை கொண்டிருக்கும் (அதிகபட்சமாக 110 டெசிபல் வரை இருப்பது நலம், அதற்கு மேல் சென்றால் செவித்திறன் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது).
பசுமை பட்டாசுகளை வெடித்த உடன் சிறிய அளவிலான நீர் துளிகளை வெளியிடும். இதன் காரணமாக பட்டாசிலிருந்து வெளிவரும் நச்சு துகள்கள் மற்றும் வாயுக்கள் காற்றில் கலக்காமல் பாதுகாக்கிறது.

பசுமை பட்டாசு மூன்று வகைகளாக பெயரிடப்படுகிறது அவை :-
safe water releaser (SWAS) (பட்டாசியிலிருந்து நீர் துளிகளை வெளியிடும் தன்மை).
Safe Thermite cracker (STAR) (பொட்டாசியம் நைட்ரேட் மற்றும் சல்பர் ஆகிய வேதிப்பொருட்களை குறைந்த அளவில் பயன்படுத்துதல்).
Safe minimal aluminium (SAFAL) (அலுமினியத்திற்கு மாறாக மெக்னீசியம் பயன்படுத்துதல் அல்லது அலுமினியத்தை குறைந்த அளவில் பயன்படுத்துதல்).
அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி இந்தியாவில் 230 தொழிற்சாலைகளுக்கு மட்டுமே பசுமை பட்டாசு தயாரிப்பதற்கான அனுமதிகளை வழங்கி உள்ளது. இந்த தொழிற்சாலைகள் மட்டுமே பசுமை பட்டாசுகளை தயாரித்து சந்தையில் விற்க இயலும். பசுமை பட்டாசுகளை தயாரிப்பதால் வெடிப் பொருட்களின் தேவை குறைகிறது இதன் காரணமாக பசுமை பட்டாசின் விலை சாதாரண பட்டாசுகளை விட சற்று குறைவாகவே இருக்கும்.
பட்டாசு வெடிப்பது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றுதான் இருந்தாலும் மற்ற உயிரினங்களுக்கு துன்பம் தராத வகையில் நமது மகிழ்ச்சி இருப்பது சிறந்தது. மக்கள் அதிகமாக கூடும் பொது இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்ப்பது நலம்.

மரத்தின் கீழோ அல்லது மரங்கள் நிறைந்த பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் ஏனென்றால் பறவைகளுக்கு ஒரே தங்கும் இடம் மரங்கள் தான் அவற்றிற்கு துன்பம் தர வேண்டாம் என உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நல்ல பதிவு