மன அழுத்தம் இல்லாமல் இருக்க
- kishor s
- Nov 7, 2021
- 1 min read
Updated: May 8, 2023

வளர்ந்து வரும் இந்த நாகரீக உலகில் மன அழுத்தம் இல்லாத ஆட்களை காண்பது என்பது மிகவும் அரிதாகி விட்டது. மன அழுத்தத்திற்கான காரணங்கள் ஒருவருக்கொருவர் மாறுபட்டாலும், சில பொதுவான காரணங்கள்... கடந்த காலங்கள் மற்றும் எதிர் காலங்களைப் பற்றி எதிர்மறையாக நினைப்பது, நமது வாழ்க்கையை பிறரது வாழ்க்கையுடன் ஒப்பிடுவது, நம் மீது நமக்கு நம்பிக்கை இல்லாமல் போவது ஆகியவை பெரும்பாலான மன அழுத்தத்திற்கான காரணங்களாக உள்ளன.
நமது அன்றாட வாழ்வில் காலை எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை நம்மை தெரிந்தோ தெரியாமலோ வேதியியலே இயக்குகிறது.
இப்பொழுது மன அழுத்தத்திற்கும் வேதியலுக்கும் என்ன தொடர்பு என்று பார்க்கலாம்....

ஒருவர் அதிக மன அழுத்தத்தில் இருக்கும் பொழுது அவரது உடம்பில் இயற்கையாக கார்டிசோல்(cortisol) என்கிற வேதிப் பொருள் அதிக அளவில் சுரக்கிறது. இதற்கு ஸ்ட்ரெஸ் ஹார்மோன் (stress hormone) என்கிற பெயரும் உண்டு. இந்த வேதிப்பொருளால் ஏற்படும் சில பக்க விளைவுகள், உயர் ரத்த அழுத்தம், டைப் 2 சர்க்கரை நோய், இதய நோய், எலும்பு தேய்மானம் மற்றும் தூக்கமின்மை ஆகிய பாதிப்புகள் ஏற்படும் என்று ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது.

மன அழுத்தத்தை தவிர்க்க சில வழிகள்...
இந்த உலகில் எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அதற்கும் ஒரு தீர்வு உண்டு என்பதை உணர்ந்து நேர்மறை எண்ணத்துடன் அதை கையாள வேண்டும்.
கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தின் மீதான எதிர்மறை எண்ணங்களைக் கைவிட்டு நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ? என்ற எண்ணத்தை கைவிட வேண்டும், ஏனென்றால் பெரும்பாலான மன அழுத்தத்திற்கு காரணம் இந்த எண்ணம்தான். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதில்லை.
பிறரின் எதிர்பார்ப்பிற்கு நமது வாழ்க்கை இல்லை, நாம் சந்தோஷமாக வாழ்வதற்கு மட்டுமே நமது வாழ்க்கை என்பதை உணர வேண்டும்.
அளவுக்கதிகமான தேநீர் மற்றும் காபி பருகுவதை தவிர்க்க வேண்டும்.
மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தலை தவிர்க்க வேண்டும்.
உடற்பயிற்சி, யோகா மற்றும் தியானம் ஆகியவற்றை தினமும் செய்ய பழகிக் கொண்டால் மன அழுத்தம் மட்டுமின்றி பல நோய்களும் நம்மை அண்டாது.
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்ற பழமொழிக்கேற்ப தினமும் சிரிக்க பழகிக் கொண்டால் மன அழுத்தத்தில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.
பொறுமை, நிதானம், நல்லது கெட்டதை பகுத்தறியும் தன்மை, எந்த பிரச்சனை வந்தாலும் நம்மால் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை. இவை அனைத்தும் உங்களிடம் இருந்தால் உங்களால் எதையும் சாதிக்க முடியும்
எண்ணம் போல் வாழ்க்கை என்பதற்கேற்ப நாம் என்னும் எண்ணமே நமது வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.
நல்லதே செய்வோம்! நல்லதே நினைப்போம்!! நல்லதே நடக்கும்!!!
Comments